tamilnadu

img

கோர விபத்தில் 29 பேர் பலி

 உத்தரப்பிரதேசம், ஜூலை 8 - உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில், திங்கள் அதிகாலை அம்மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. லக்னோவில் இருந்து தில்லிக்குச் சென்று கொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட அந்தப் பேருந்தில் 46 பேர் பயணித்தனர். அதிகாலை 4.30 மணி அளவில், பாலத்தின் மீது பேருந்து சென்ற போது, ஓட்டுநர் கண் அயர்ந்து விட்டதாகக்  கூறப்படுகிறது. அப்போது, பாலத் தடுப்பை உடைத்துக் கொண்டு 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்தக் கொடூர விபத்தில், 29 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால்வாயில் மூழ்கி கிடந்த அவர்களது சடலங்களை, உள்ளூர்வாசிகளும் மீட்புக் குழுவினரும் போராடி மீட்டனர். படுகாயமுற்ற பலர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜே.சி.பி. உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த போக்குவரத்து ஆணையர் தலைமையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குழு அமைத்து 24 மணி நேரத்திற்குள்ளாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

;